TOTAL FAMILY COMMITTED SUICIDE IN SALEM CRIME VIDEO CANCER VAI
புற்றுநோயால் மகன் இறப்பு.. துக்கம் தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை..
சேலத்தில், 18 வயது மூத்த மகன் ரத்தப் புற்றுநோயால் இறந்த துக்கம் தாங்க முடியாமல், தந்தை, தாய், இரண்டு மகன்கள் என குடும்பமே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அளவற்ற பாசம் வைத்திருந்த மூத்த மகன், ரத்தப் புற்றுநோயால் திடீரென இறந்தததைத் தாங்க முடியாத முருகன், குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். முருகன் குடும்பத்தில் நடந்தது என்ன?
சேலம் வாய்க்கால் பட்டறை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் 38 வயதான முருகன் - 32 வயதான கோகிலா தம்பதி. 18 வயதான மதன்குமார், 17 வயதான வசந்தகுமார், 12 வயதான கார்த்திக் ஆகியோர் இந்த தம்பதியின் மகன்கள். முருகன் சேலம் கோட்டை பகுதியில் முடிதிருத்தகம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு வால்காடு பகுதியில் வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகன் மதன்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரத்தப் புற்று நோயால் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு ஒரு மாதம் முன்பு தான் அவருக்கு ரத்தப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. மூத்த மகனின் இழப்பை தாங்க முடியாமல் குடும்பம் தவித்துள்ளது. முருகன், தனது மகன் நினைவாகவே எப்போதும் இருந்துள்ளார். மகனிடம் பேசுவதுபோல தானாகப் பேசிக் கொண்டிருப்பார் என்றும், மகனின் செல்போனுக்கு அனுப்புவதற்காக வீடியோ எடுத்துக் கொண்டிருப்பார் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளுக்கு விடுப்பு விட்டிருப்பதால் வீட்டில் இருந்த 2வது மகனை முடிதிருத்தகம் ஒன்றில் பயிற்சிக்கு சேர்த்திருந்தார் முருகன். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு 2வது மகன் வசந்தகுமார் அந்தக் கடையைத் திறக்கச் சென்றுள்ளார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட முருகன் உடனடியாக வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.
வசந்தகுமாரும் வீட்டிற்கு சென்றபின், நான்கு பேரும் காபியில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீண்ட நேரமாகியும் கடை திறக்காததால் மற்ற ஊழியர்கள் வந்து பார்த்தபோதுதான் 4 பேரும் தற்கொலை செய்துக்கொண்டது வெளியில் தெரியவந்தது. தகவல் அறிந்து அம்மாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சடலங்களை அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து இவர்களின் தற்கொலைக்கு மூத்த மகன் மறைவுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்னையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகன்கள் என 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050