கோவையில் 4 வயது குழந்தையை சித்ரவதை செய்த வளர்ப்பு பெற்றோர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் சம்பவம்

Youtube Video

கோவையில், 4 வயது பெண் குழந்தையை அடித்து சித்திரவதை செய்த வளர்ப்பு பெற்றோரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:


  4 வயதே ஆன இந்தப் பெண் குழந்தை தனது வளர்ப்பு பெற்றோரிடம் படாதபாடுபட்டுள்ளார். உடலெல்லாம் காயங்கள், வீக்கத்துடன் குழந்தை மீட்கப்பட்டுள்ளார்.

  கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்லா - நஜும் ஷா தம்பதி. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாததால், வேறொரு தம்பதியின் 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்து, இஸ்லாமியப் பெயர் மாற்றி வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நஜும் ஷா கருவுற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தத்தெடுத்த குழந்தை மீதான பாசம் குறைந்துள்ளது. அதனால் அந்த தம்பதி அடிக்கடி குழந்தையை அடிப்பதும் குழந்தை அலறுவதும் அக்கம்பக்கத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

  பலமுறை அக்கம்பக்கத்தினர் தம்பதிக்கு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் குழந்தை அலறவே அக்கம்பக்கத்தினர் அப்துல்லா வீட்டிற்குள் செல்போனில் கேமராவை இயக்கியபடி சென்றுள்ளனர். குழந்தைக்கு என்ன பிரச்னை என்று கேட்டபோது அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று நஜும்ஷா சமாளித்துள்ளார்.

  இதையடுத்து குழந்தைக்கு உடையணிவித்து வெளியில் அழைத்து வந்து விசாரித்தபோதுதான் அவருக்கு உணவளிக்காமல் அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. குழந்தை மெலிந்து உடல் முழுவதும் காயங்களுடனும் வீக்கத்துடனும் காணப்பட்டதைப் பார்த்து அப்பகுதியினர் வேதனை அடைந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதியினர் உடனடியாக போத்தனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் குழந்தையை மீட்டு, வளர்ப்பு பெற்றோரைக் கைது செய்து அழைத்துச் சென்றபோது அப்பகுதி மக்கள் திரண்டு இருவரையும் அடிக்கப் பாய்ந்தனர். வார்த்தைகளால் திட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். வளர்ப்பு பெற்றோரைக் கைது செய்த போலீசார் குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இந்நிலையில் வளர்ப்பு தாய் - தந்தை இருவரிடமும் சனிக்கிழமை காலை முதல் போத்தனூர் போலீசாரும், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு்ளன. கோவையின் ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 7 வயது மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதலால் கணவனை விட்டுப்பிரிந்த மனைவி குழந்தைகளுடன் கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். அங்கு இருந்தபோது 6 மாதங்களுக்கு முன்பு, மூத்த குழந்தையை அமீனா என்ற பெண்ணுக்கும், இளைய குழந்தையை அப்துல்லா தம்பதிக்கும் விற்பனை செய்துள்ளார்.

  4 வயது குழந்தையின் உடலில் பல தழும்புகள் காணப்படுவதால் தாயின் கள்ளக்காதலன் குழந்தையை சித்ரவதை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

  மேலும் படிக்க... திறப்பு விழாவின் போதே இடிந்து விழுந்த அம்மா மினி கிளினிக்

  இந்த வழக்கில், அப்துல்லா, நஜும்ஷா தம்பதி, மூத்த குழந்தையைத் தத்தெடுத்த அமீனா என்ற பெண், குழந்தைகளை விற்க உதவிய சிக்கந்தர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளை விற்ற பெண்ணையும் அவரது கணவன் மற்றும் கள்ளக்காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  4 வயது பெண் குழந்தைக்கு உணவளிக்காமல் வளர்ப்பு பெற்றோர் அடித்து சித்ரவதை செய்ததும். பொதுமக்கள் குழந்தையை மீட்டதுமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: