ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 11, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 11, 2022)

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Tamil News Today : மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

வருகின்ற 18-ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆனால், 14 முதல் 18-ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என கருத்து தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைப்பதற்கான புதிய டெண்டரை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ராயபுரத்தில் நியாயவிலை கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 186 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திங்கட்கிழமை 6 ஆயிரத்து 190 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கோச்சிங் சென்டர் சென்றால் மட்டுமே நீட் தேர்வில், தேர்ச்சி அடையக் கூடிய சூழல் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையின் காரணமாக பிரௌசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் பெண் ஊழியர்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் தனியாகத் தவித்த மூன்று வயது சிறுவனை மீட்ட போலீசார், 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குடியாத்தத்தில் முகக் கவசம் அணியாமல், பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்த, போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 12.6 சதவீதம் அதிகம்.

கொரோனா 3வது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் விகிதம், 5 முதல் 10 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், குறைந்தபட்ச ஆதார விலைக்கான குழு அமைப்பது மற்றும் விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, விவசாய சங்கத்தினர் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மும்பையில் ஏர்-இந்தியா விமானம் அருகே, வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள நாகரோல் தேசிய விலங்கு பூங்காவில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த யானைகள் அங்கிருந்த கால்வாயில் சிக்கி மேலே ஏற முடியாமல் தவித்தன.

Also Read : கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே மோதல் - சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு

சீக்கியர்களின் 10-வது மற்றும் கடைசி குருவான கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி, பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தீபங்கள் ஏற்றப்பட்டு, வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன

அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Read More : உண்டியல் சேமிப்பில் இலவச மாஸ்க்.. சிறுவனுக்கு குவியும் பாராட்டு

நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு விசா உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Must Read : வாட்ஸ் அப்பில் பரவிய போட்டோ.. ஷாக்கான உதவி வேளாண்மை பெண் அலுவலர் – மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

மியான்மரில் அரசின் நடைமுறைகளை பின்பற்றாமல் வாக்கி - டாக்கிகளை வாங்கிய வழக்கில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

First published:

Tags: Headlines, Tamil News, Top News