இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர். செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு 102 ரூபாய் 91 காசுகளுக்கு விற்பனையாகிறது.டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் 60 கி.மீ தூர இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் சட்டப்படி செல்லாது என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காவல்நிலையத்தில் உள்ள CCTV கேமராக்களின் பதிவை ஓரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் சேமித்து வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரில் பெண்ணை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஜுனைத் அகமதுவை கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
இந்திய பேட்மின்டன் வீரர் லக்ஷ்யா சென், சர்வதேச தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார். தற்போது 20 வயதாகும் இவர், கடந்த ஆண்டு உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
சீனாவின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நகருக்கு புறப்பட்ட பயணிகள் விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் டோனட்ஸ்ட் மற்றும் லூகான்ஸ்க் பிராந்தியங்களிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக அமெரிக்க தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் கட்டாயத் தேவை ஏற்பட்டால் மட்டுமே அணுஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அணுஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக உலக நாடுகள் எச்சரித்துவரும் நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.