Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் ( ஜனவரி 29, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் ( ஜனவரி 29, 2022)

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது

  தமிழகம் முழுவதும் 20-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது

  உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியும், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சும் விளையாட உள்ளனர்.

  கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதனை ஏற்கனவே இரண்டு கட்டங்களாக சோதனை செய்து முடித்த அந்நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி கேட்டு மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பிடம் சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. அதனடிப்படையில் மூன்றாம் கட்ட சோதனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர். வி. அனந்த நாகேஸ்வரன் பதவியேற்றுள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கேவி. சுப்ரமணியனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர். வி. அனந்த நாகேஸ்வரன் பதவியேற்றுள்ளார்.

  தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய கோவிட் வைரசான 'நியோகோவ்' அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்த கூடும் என, சீனாவின் வூஹான் நகர விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 100 சதவீத மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் ஒன்றாம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன் , நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார். இந்தநிலையில் தற்போது அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

  கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவக்கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஊசிகள், பாட்டில்கள் சாலையோரம் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. அதன்மூலம் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டுமென்ற உத்தரவை தற்காலிகமாக திரும்ப வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

  கொரோனா கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகளின் அடிப்படையில் நேற்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால், கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை , தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி காவல்துறையினர் பெண்ணை விடுவித்துள்ளனர்.

  மதத்தின் அடிப்படையில் பகைமை வளர்க்கும் விதமாக டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பொய் செய்தி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து நேரடியாக சென்று விசாரணை நடத்த உள்ளதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

  சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மொபைல் ஆப் மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை, வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து சோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது.மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சோதனை செய்து பார்க்கப்படுகிறது.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Election, Headlines, Latest News, Politics, Sports, Tamilnadu

  அடுத்த செய்தி