வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு சுங்கக் கட்டணம்! - பாஸ்டேக் முறையில் அதிகரிக்கும் மோசடி

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகன ஓட்டிகளிடமும் இதே போன்று முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்த கமர் என்பவர் தனக்கு சொந்தமாக கார் ஒன்றை வைத்துள்ளார். இவர் தனது காரை கடந்த ஒரு வாரமாக வீட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், மதுரை திருப்பாசேத்தி சுங்கச்சாவடி வழியாக மதுரை சென்றதாக கூறி பாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறது.

  இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கமர் ராகுமான், ``இதே போன்று பல முறை பாஸ்டேக் மூலம் தனது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வேலை செய்யவில்லை எனக் கூறி நேரடியாக பணம் பெற்றுவிட்டு, வாகனம் வீட்டிற்கு வந்த உடன் வங்கி கணக்கில் இருந்து பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். சிவகங்கை சுற்றுவட்டார வாகன ஓட்டிகளும் இதே குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  பாண்டியாராஜ் என்ற வாடகை கார் ஒட்டுனர், ``உள்ளூர் வாகன ஓட்டிகள் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகன ஓட்டிகளிடமும் இதே போன்று முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது” என்றார். இது குறித்து திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் விசாரித்த போது, பணம் எடுக்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட வாகனம் தங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால் பணம் எடுக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுகின்றனர்.
  Published by:Ram Sankar
  First published: