ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற வீடு வீடாக டோக்கன் விநியோகம்

ரேஷன் கடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ரேஷன் கடைகளில் ஜூன் மாதமும் டோக்கன் முறையிலேயே பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள போதும், பொது மக்களின் நலன் கருதி காலை 8 முதல் நண்பகல் 12 வரை ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில், முந்தைய மாதங்களை போன்று ஜுன் மாதத்திலும் டோக்கன் முறையிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கடையில் 200 பேருக்கு மட்டும் சுழற்சி அடிப்படையில் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இன்று முதல் வருகின்ற 4-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரேஷன் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகிக்க உள்ளனர்.

    அதில் அவர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதையடுத்து டோக்கனில் குறிப்பிட்டது போல், ஜூன் மாதத்திற்கான பொருட்களை வருகின்ற 5-ம் தேதி முதல் பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிர்வாக காரணத்தால் துவரம் பருப்பு மட்டும் 7-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி ரேஷன் பொருட்களை வாங்குவற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஆன்லைன் அல்லது தொலைப்பேசி வாயிலாக மளிகைப் பொருட்களை ஆர்டர் பெற்று அவற்றைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்களுடன் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : ஆக்சிஜன் அளவு 90க்கு குறைவாக இருந்தால் மட்டுமே கொரோனா மருத்துவமனையில் அனுமதி - தமிழக அரசு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

    இதற்கிடையில், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது என்றும், அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: