இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.
சமுதாயத்தின் விடிவெள்ளியாம் சமூகநீதிப்போராளி தந்தை பெரியார் ஈரோடு மாவட்டம் வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17-9-1879ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். செல்வச்செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியப்பாகுபாட்டினை காண சகிக்காமல், சமூக நீதித்தேடி சளைக்காமல் போராடி களத்தில் அவர் பட்ட காயங்களும், அவமானங்களும் ஆயிரமாயிரம்.
இளம் வயதில் பல்வேறு அமைப்புகளில் தலைமை ஏற்றவர் காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரசில் இணைந்தாலும் தான் கொண்டிருந்த கொள்கை, லட்சியங்கள் ஈடேறிட வாய்ப்பில்லாது போனதால், அக்கட்சியில் இருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படவும், படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து, விழிப்புணர்வு பெறமுடியும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு, “குடியரசு” வார இதழ் தொடங்கி, சமுதாயத்தில் நிலவிவரும் வருணாசிரமத்தை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டுமே தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவை இரண்டும் அவரது இலக்குகளாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரின் சுயமரியாதை எனும் சுயசிந்தனையால் தமிழினம் இன்று தலைநிமிர்ந்துள்ளதோடு சிந்தனை தெளிவும் பெற்றுள்ளது. விடாது அவர் இடித்துரைத்த பகுத்தறிவினாலும், விதைக்கப்பட்ட சமூக நீதி கருத்துகளாலும் தமிழகம் தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று நிற்பதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏக்கத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
தந்தை பெரியாரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றுகின்ற வகையில் அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சி பொறுப்பிலே அமர்ந்தபோது ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை’ என்று கம்பீரமாக அறிவித்தார். தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதை திருமணச்சட்டம், கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்கப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார். அவரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் அருமைத்தம்பியான தலைவர் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தார்.
குறிப்பாக, பெண்களுக்கு சம சொத்துரிமை சட்டம், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, பகுத்தறிவு பகலவனாம் ஈ.வே.ராமசாமிக்கு ‘பெரியார்’ என்கின்ற பட்டம் வழங்கிய டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் ஆகியோரின் பெயர் தாங்கிய திட்டங்களாம் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித்தொகை, ஈ.வே.ரா.மணியம்மையார் ஏழை கைம்பெண் மகள் திருமண நிதியுதவி, பெரியார் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழும் சமத்துவபுரம் திட்டம் போன்ற பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி உள்ளார்.
திராவிட இயக்கத்தின் நீட்சியாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதியின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியை நிலைநாட்டும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தியதோடு, 2 பெண் ஓதுவார்களையும் நியமித்து தந்தை பெரியாரின் கனவை நனவாக்கினார்.
தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளாம் செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு, அன்றையதினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
Must Read : ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?
மேலும், ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள நினைவிடத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Periyar Birthday, TN Govt