வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று இறுதிநாள் : இன்றே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகிறது

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று இறுதிநாள் : இன்றே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகிறது

இந்திய தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4,492 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன...

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாக இருக்கின்றது.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மேலும், சில சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.

    தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தொடங்கி, 19ஆம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கும், 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். சென்னையை பொறுத்தவரை, 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 548 ஆண்களும், 87 பெண்களும், ஒரு திருநங்கை என மொத்தம் 636 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7,255 வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத மனுக்கள், தேவையான விவரங்களை முறையாக பூர்த்தி செய்யாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த வகையில், 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,492 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    அப்போது, சொத்து பட்டியல், வழக்குகள் போன்றவற்றில் சந்தேகம் எழுந்த வேட்புமனுக்கள் தனியாக எடுத்துவைக்கப்பட்டு இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. இந்த பட்டியலில் சில அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்களும் இருந்ததால், நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு உரிய விளக்கங்கள் அளித்ததை தொடர்ந்து பெரும்பாலானவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இன்று மாலையே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

    Must Read : குஷ்புவின் அரசியல் பயணம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு

    தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, அங்கும் இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: