• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 64 ஆயிரத்து 299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

  • Share this:
    ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. 23ஆம் தேதி (நாளை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன. பாமக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தனித்தே களம் காண்கின்றன.

    இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 48,635 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 11,393 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,912 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 359 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 64 ஆயிரத்து 299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார் மனைவி பிரேமா வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் 25 மேற்பட்ட வேன்களில் வாலாஜாபாத் வட்டார அலுவலகம் வரை அணிவகுத்து வந்தார். இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் சென்ற வேட்பாளரை தடுத்து நிறுத்திய தேர்தல் அலுவலர்கள் இரண்டு பேரை மட்டும் வேட்பு மனுதாக்கலுக்கு உள்ளே அனுமதித்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒரு சிலர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமமான நாயக்கனேரி ஊராட்சியில் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 5 நபர்கள் மட்டுமே உள்ள ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 50 ஆயிரத்து 500 ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்படும் இந்த குழுக்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், அச்சுறுத்தல், மிரட்டல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் அதிகளவு பணம் லஞ்சமாக வழங்குவது தொடர்பான புகார்கள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    அதிமுக-வின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதன்படி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட, மாணவி சவுந்தர்யாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். விசிக சார்பில் அக்குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தார். திமுக கூட்டணியில், கேட்கப்பட்ட இடங்கள் கிடைக்கவிட்டாலும், நல்ல இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை முடிந்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.

    இந்நிலையில், வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களில் 14 மாவட்டக் கவுன்சிலர் பதவிகள் உள்ளன இதில், 13 இடங்கள் திமுகவுக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Must Read : கோயில்களில் தமிழில் அர்ச்சனை : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

    மீதமுள்ள 132 இடங்களில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: