இந்து முன்னணியின் சார்பில் தொடங்கிய இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணத்தின் நிறைவு விழாவானது இம்மாத தொடக்கத்தில் சென்னை மதுரவாயலில் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் 'ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் உடனடியாக கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 ஆம் தேதி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை தேடிவந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பெயரில் புக் செய்து 3 நாட்களாக நட்சத்திர விடுதியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீசார் உதவியுடன் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதிமன்றம் விடுமுறை என்பதால் எழும்பூர் 12வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு அவரை ஆஜர் படுத்தினர். அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் பெரியார் சிலையை அகற்றுமாறும், மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருமாறு மட்டுமே கனல் கண்ணன் பேசியதாகவும் வாதிட்டனர்.
Also Read : ஓபிஎஸ் திருந்திவிட்டார்.. இபிஎஸ் அக்மார்க் சுயநலவாதி - டிடிவி தினகரன் சாடல்
காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வழக்கின் தீவிரம் குறித்து வாதங்களை முன் வைத்தனர். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்து புழல் சிறையில் அடைத்தனர்.
Also Read : நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
இந்நிலையில், கனல் கண்ணன் கைதை கண்டித்து இன்று காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது. தமிழக அரசின் தொடரும் இந்து விரோத பாரபட்ச அணுகுமுறை மக்கள் மனதில் மிகப்பெரும் கோபத்தை உருவாக்கி வருகிறது என்றும், மேலும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்து முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Munnani, Kanal Kannan, Tamilnadu