இன்றைய தலைப்பு செய்திகள் : 8-ம் வகுப்பு வரையான வகுப்புகள் தொடங்குமா?

மாதிரிப் படம்

உள்ளூர் முதல் உலக அளவில் நிகழ்ந்த முக்கியச் செய்திகள், அரசியல், விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு என இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு | செப்டம்பர் 15, 2021

 • Share this:
  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

  தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பயங்கரவாதிகள் 6 பேர் கைது

  பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ மூலம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் இரண்டு பேர் உள்பட ஆறு பயங்கரவாதிகளை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது. திருவிழா காலங்களில் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்காக, தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் உடன் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

  தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக வகுப்புகள் தொடங்கப்படுமா? 

  தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று அறிக்கை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  பொறியியல் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

  பொறியியல் படிப்பு சேர்க்கையில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில், இன்று ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 27ம் தேதி ஆரம்பமாகிறது.

  ஜவுளி நிறுவனங்களுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

  தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி.லிட். ஆகிய நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐ-போன் 13 சீரிஸ் அறிமுகம்

  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐ-பேட் மினி அறிமுகம் செய்யப்பட்டது. எட்டு புள்ளி மூன்று இன்ச் தொடுதிரை வசதிகொண்ட இந்த ஐ-பேட் மினியில் 5ஜி தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது. அதிவேக செயல்திறன் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோகின் சிப் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 64 ஜிபி மெமரி வசதிகொண்ட ஐ-பேட் மினி 46 ஆயிரத்து 900 ரூபாய் என்றும், 256 ஜிபி மெமரி ஐ-பேட் மினி 60 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: