1639-ம் ஆண்டில் கொரமண்டல் கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டது மதராசபட்டிணம். இங்கு வாழ்ந்த மக்கள் தங்களுடைய குடிநீர் தேவைக்காக ஆறு, கண்மாய், குளங்கள் மற்றும் கிணறுகளையே நம்பியிருந்தனர்.
நீர்தொற்று நோய்கள் பரவியதால் 1772-ல், அன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே பெத்தநாயக்கன்பேட்டையில் ஏழுகிணறு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதுதான் மதராசபட்டிணத்தில் குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முதல் முயற்சி.

Photo : மெட்ரோ குடிநீர் வாரிய முன்னாள் உதவி செயற்பொறியாளர் மீனாட்சி சுந்தரம்
அதன்பின், 1870-ல் தாமரைப்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 6 அடி மதகு கட்டி சோழவரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து திறந்தவெளி கால்வாய் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில், தண்ணீர் மாசுபாடு அதிகரித்ததால் 1914ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி மதராஸ் குடிநீர் விநியோக திட்டம் உருவாக்கப்பட்டது. புழல் ஏரியில் இருந்து மூடிய கால்வாய் வழியாக கீழ்ப்பாக்கத்திற்கு நீர் கொண்டு வரப்பட்டு, மணல் மந்த வடிகட்டி மூலம் சுத்திகரித்து வழங்கப்பட்டுள்ளது.
1911-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி 5 லட்சத்து 18 ஆயிரம் மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஜெ.டபிள்யு.மேட்லி என்ற ஆங்கிலேய பொறியாளரால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால், மதராஸ் குடிநீர் வழங்கலின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார். இதனால், சென்னை தியாகராய நகரில் உள்ள சாலை ஒன்றிற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெ.டபிள்யு.மேட்லி
இந்த திட்டத்தை பின்பற்றி பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து சென்னைக்கு தண்ணீர் விநியோகிப்பதற்காக 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தற்போது சென்னை மக்கள் தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்