கி.ரா. பெயரில் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும்; திருமாவளவன் வேண்டுகோள்!

திருமாவளவன்

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருப்பதைப் பாராட்டுகிறோம்.

 • Share this:
  கரிசல் இலக்கிய மேதை கி. ராஜநாராயணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், கரிசல் இலக்கிய மேதை கி. ராஜநாராயணன் தனது 98ஆம் அகவையை நிறைவு செய்ய சில நாட்களே உள்ள நிலையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு துயருகிறோம். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. அவருக்கு எமது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.

  புதினங்களில் உரையாடலுக்கு மட்டும் தான் பேச்சு வழக்கைப் பயன்படுத்துவது என்ற எழுதாத விதி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில் ஒட்டுமொத்த படைப்பையும் பேச்சு வழக்கிலேயே எழுதி புதிய தடத்தை உருவாக்கியவர் கி ரா அவர்கள். கரிசல் மக்களையும், அவர்களது மரபுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் தனது படைப்புகளின்மூலம் அழுத்தமாக ஆவணப்படுத்தியவர்.

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர் அனைவரும் போற்றத் தக்க விதத்தில் பங்களிப்புச் செய்தார்.

  ஜூனியர் விகடன் இதழில் அவர் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றது செவ்வியல் இசையிலும் ஆழ்ந்த புலமை கொண்ட கி.ரா. அவர்கள் தான் இறக்கும் வரையிலும் எழுதிக்கொண்டிருந்தார். 98 வயதில் அவரது கையெழுத்திலேயே உருவான ‘அண்டரண்ட பட்சி’ என்ற படைப்பு உலகில் எந்த எழுத்தாளரும் செய்யாத ஒரு சாதனையாகும்.

  Also read :  மறைந்த கி.ரா. வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தனது சமகால எழுத்தாளர்கள் அனைவரோடும் நல்லுறவைப் பேணிய கி.ரா. அவர்கள் இளம் தலைமுறை படைப்பாளிகளுக்கும் ஊக்கமாக இருந்தார்.

  எழுத்தாளர் கி.ரா. அவர்களின் உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருப்பதைப் பாராட்டுகிறோம். அவரது நினைவாக நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவர் பிறந்த இடைச்செவலில் அமைக்க வேண்டும் என்றும், அவர் பெயரில் விருது ஒன்றைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: