ஏன் அந்த இரண்டு மையங்களை தேர்வு செய்தீர்கள்? அதிகாரிகளை தலைசுற்ற வைத்த குரூப் 4 தேர்வர்கள்

  • News18
  • Last Updated: January 20, 2020, 9:00 AM IST
  • Share this:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், ராமேஸ்வரம் மையத்தை ஏன் தேர்வு செய்தோம் என தேர்வர்கள் கூறிய காரணம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.


இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்கள், இந்த இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும் அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்வர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் வாரம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூட்டத்தில், முறைகேடு புகாரில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வையே ரத்து செய்யலாமா? என்பது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்