ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவர்களின் உதவி இல்லாமல் இடைத்தரகர்கள் செயல்பட்டிருக்க முடியாது...! TNPSC முறைகேடு விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டு

அவர்களின் உதவி இல்லாமல் இடைத்தரகர்கள் செயல்பட்டிருக்க முடியாது...! TNPSC முறைகேடு விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கோப்புப்படம்)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கோப்புப்படம்)

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தகரர்கள் மட்டுமின்றி தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2017ல் நடத்தப்பட்ட குரூப் 2ஏ மற்றும் 2016ஆம் நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  முதன்முதலில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வின்போது சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு பயிற்சி மையத்தில் மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்ட வினாத்தாளும், குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற வினாத்தாளும் ஒன்றாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

  அதன்பின் 2012ல் குரூப் 2 தேர்வில் கொல்கத்தாவில் அச்சிடப்பட்ட வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரோடு சீனிவாஸ் சதீஷ்குமார், மோகன்பாபு, செல்வராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

  அதன் தொடர்ச்சியாக 2012ஆம் ஆண்டு அப்போதைய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த செல்லமுத்து மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் வீடுகள் அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தப்பட்டது. இதனால், செல்லமுத்து தனது பதவிக்காலத்திற்கு முன்பே ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.

  2016ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வு, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு என டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பட்டியல் நீண்டு கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டும் பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள், டிஎன்பிஎஸ்சியில் உயர் பதவியில் இருப்பவர்கள் துணையில்லாமல் இடைத்தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கின்றனர்.

  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடு புகார்களால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

  எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: TNPSC