முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் பேச்சு நடத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்து தமிழ்நாட்டுடன் முதலமைச்சர் நிலையிலான பேச்சுகளை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது. முல்லைப்பெரியாற்று அணையில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் கேரளம் விரித்துள்ள இருதரப்பு பேச்சு என்ற வஞ்சக வலையில் தமிழகம் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது.
கேரள சட்டப்பேரவையில், முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்த உறுப்பினர் ஒருவரின் வினாவுக்கு, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சரின் சார்பில் விடையளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி,‘‘முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்து தமிழ்நாட்டு அரசுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை தோல்வியடைந்து விட்டன. அதைத்தொடர்ந்து திசம்பர் மாதத்தில் தமிழ்நாடு - கேரள முதலமைச்சர்களிடையே புதிய அணை கட்டுவது குறித்து பேச்சு நடத்துவதென கேரள அரசு முடிவு செய்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்து, கேரள அமைச்சர் கூறியதைப் போல கடந்த காலங்களில், தமிழகம் மற்றும் கேரளம் இடையே பேச்சுகள் நடந்ததா? என்பது தெரியவில்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்பட்டிருந்தால் அது பெரும் தவறு ஆகும். அதுமட்டுமின்றி, முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்து பேச கேரள அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்கக்கூடாது.
முல்லைப்பெரியாற்று அணை விவகாரத்தில் கேரளத்திற்கு எப்போதெல்லாம் பின்னடைவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் புதிய அணை குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழகத்திற்கு அழைப்பு விடுப்பதை கேரள அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. முல்லைப் பெரியாற்று விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டு விட்டது. இத்தகைய சூழலில் முல்லைப் பெரியாற்று சிக்கலுக்கு மீண்டும் உயிரூட்டவே கேரளா இப்போது பேச்சு நடத்த அழைப்பு விடுக்கிறது. இந்த உண்மையை தமிழக அரசு உணர வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது; அதன் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்பின் 2014-ஆம் ஆண்டில் அளித்தத் தீர்ப்பில் ‘‘அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிட கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் இதுவரை 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. முல்லைப்பெரியாற்று அணையின் அங்கமாக உள்ள பேபி அணையை வலுப்படுத்த கேரளம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது தான் இதற்குக் காரணம்.
கேரளத்தில் தற்போது பெய்து வரும் மழையைக் காரணம் காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தனி நபர்கள் மூலம் சில வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் இப்போதுள்ள நீர்மட்டம் தொடரலாம் என்று கூறி விட்டது. மற்றொருபுறம் பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு கேரள அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதியை கேரளம் ரத்து செய்து விட்டாலும் கூட, விரைவில் அனுமதி அளித்து தான் ஆக வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்டால் அடுத்த சில மாதங்களில் பேபி அணையை வலுப்படுத்தி, உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். அதைத் தடுக்கவே கேரளம் துடிக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு சிக்கலைப் பேசித் தீர்க்கும்படி 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால், அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி தில்லியில் பேசினார்கள். அதைத்தொடர்ந்து திசம்பர் 18-ஆம் தேதி இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களான துரைமுருகனும், பிரேமச்சந்திரனும் பேசினார்கள். இரு கட்ட பேச்சுகளும் தோல்வி அடைந்தன. இந்தப் பேச்சுகளை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு வழக்கு விசாரணையை கேரள அரசு 7 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. அதேபோல், இப்போதும் புதிய அணை குறித்து தமிழகத்தை பேச்சுக்கு அழைப்பதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதங்களுக்கு புத்துயிரூட்டவும் கேரளம் துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்துவிடக் கூடாது.
எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.