தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு
மழை நீடிக்கும் என்று
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருகிறது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகமான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13ஆம் தேதி (நாளை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரையில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை கேரளக் கடற்கரைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த அக்டோபர் 1 முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 42 சென்டி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 28 சென்டிமீட்டர். வழக்கமானதை விட இது 56 சதவீதம் அதிகமாகும். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தளவில் வடகிழக்கு பருவமழை இயல்பு அளவு 44 சென்டிமீட்டர். இது 85 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் 142 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தளவில் 7-ம்தேதி முதல் இன்று வரை 8 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. 490 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.