ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive | பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் மீண்டும் சர்ச்சை... நடப்பது என்ன?

Exclusive | பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் மீண்டும் சர்ச்சை... நடப்பது என்ன?

திருச்சி பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ரயில்வே வாரிய பரிந்துரைப்படி ரயில்வே துறையில் உள்ள பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 581 தொழில் நுட்ப பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு & நியமனம் தற்போது  நடைபெற்று வருகிறது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மட்டுமே பணி நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் பீகார் மாநிலத்தவர்கள் 163, ராஜஸ்தான் 115 பேர் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டமைப்பு, ரயில்வே அப்ரண்டிஸ் சங்கத்தினர் , அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வரும் 17ம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, பொன்மலை பணிமனையில் ஏற்கனவே பணியில் உள்ள வட மாநிலத்தவர்கள் விருப்பத்தின் பேரில் படிப்படியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த இடங்களில் புதிதாக வரும் வட மாநிலத்தவர்களைக்  கொண்டு நிரப்ப திட்டமிட்டு, தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பை குறைத்து வருவதாக புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே ரயில்வே தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும்.  பாரபட்சமின்றி தேர்வு செய்ய வேண்டும். அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து காத்திருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களில் 90 % இடங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அகில இந்திய ரயில்வே அப்ரண்டீஸ் சங்கத்தினர்  வலியுறுத்தியுள்ளனர்.

இந்த  குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி பொன்மலை ரயில்வே  பணிமனை மேலாளர் சியாமந்தர் ராமிடம் கேட்டதற்கு, கடந்த 2017ம் ஆண்டு 581 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) தேர்வு நடத்தியது. இதில், தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு & பணி நியமனம் கடந்த 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தினமும் 50 - 60 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று தற்போது வரை சற்றேக்குறைய 300 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டினர் 12, கேரளா 12, ஆந்திரா மாநிலத்தினர் 16 பேர் தேர்வாகியுள்ளனர்.

பீகார் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வாகியுள்ளதற்கு, அவர்கள் ரயில்வே பணிக்காக திட்டமிட்டு, தேர்வுக்கு  தயாராகியுள்ளதே காரணம். தகுதியுடையவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமனத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தேர்வு நடைபெறுகிறது. பொன்மலை பணிமனையில் இருந்து பணிமாறுதல் செய்யப்படுவதிலும் தவறேதும் இல்லை என்றார்.

அதேநேரத்தில், கொரோனா காலத்தில் வெளிமாநிலத்தினர் இவ்வளவு பேர் இ.பாஸ் பெற்றுதான் திருச்சிக்கு வந்தனரா? அவர்களுக்கு இ.பாஸ் எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இ.பாஸ் சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 1,765 பணி நியமனத்திலும் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Indian Railways, Trichy