Home /News /tamil-nadu /

காவிரி பிரச்னையில் தோற்றால் வருங்கால சமுதாயம் காரி உமிழும்.. உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் துரைமுருகன்

காவிரி பிரச்னையில் தோற்றால் வருங்கால சமுதாயம் காரி உமிழும்.. உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் துரைமுருகன்

துரை முருகன்

துரை முருகன்

Mekedatu Row: காவிரி போராட்டம். நம்முடைய மகன் அடுத்து பேரன், கொள்ளு பேரன் வரை இப்போராட்டம் முடியாதோ என சந்தேகம் தோன்றுகிறது - சட்டப்பேரவையில் துரைமுருகன்

    காவிரி பிரச்னையில் நாம் தோற்றுப் போனால், வருங்கால சமூதாயம் நம்மை காரி உமிழும் என அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    சட்டப்பேரவையில், மேகதாது அணை குறித்து தனித்தீர்மானம் கொண்டு வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மேகதாது பிரச்சனை தமிழ்நாடு - கர்நாடகம் இடையேயான உணர்வுப்பூர்வமான பிரச்சனை. காவிரி ஆணையம் ஒன்று போட வேண்டும். அதை போட மாட்டேன் என்று கூறினார்கள். போட்டபின், தலைவர் போட மாட்டேன் என்று கூறினார்கள் அதற்கும் வாதாடினோம்.

    மேலும், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் செயலுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவிப்பதாகவும், மேகதாது அணை திட்டத்துக்கு தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதியையும் தரக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

    Also Read: பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு முறையை முற்றிலும் கைவிடுகிறதா தமிழக அரசு?

    தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இந்த தீர்மானத்தை கொண்டு வந்த போதெல்லாம் திமுக ஆதரித்துள்ளதாகவும், திமுக கொண்டு வந்த நேரத்தில் அதிமுகவும் ஆதரித்துள்ளதாகவும் கூறிய அவர், நமக்குள் ஆயிரம் இருக்கலாம், யாராக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் பேசுவதை விட்டு விட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  ‘என்று முடியும் இந்த சுதந்திர தாகம்’ போல்  என்று முடியும் காவிரி போராட்டம்?. நம்முடைய மகன் அடுத்து பேரன், கொள்ளு பேரன் வரை இப்போராட்டம் முடியாதோ என சந்தேகம் தோன்றுகிறது.

    பொழிகின்ற மழையை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது என கூறிய அவர், அது நமக்கு தான் என்பதை உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்றும், நமக்கு இயற்கையாக கிடைக்கும் நீரை உபயோகித்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மறித்து அணை கட்டுவேன் என்பது எவ்வளவு பெரிய அநியாயம்? எனவும் கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாடு தண்ணீர் பெறுவதற்கே ஒரு பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கமாட்டேன் என்று ஒரு மாநிலம் சொன்னால் எங்கே இருக்கிறது Federalism? எங்கே இருக்கிறது கூட்டாட்சி? இதை விட்டுவிட்டால் வருங்கால சமூகம் நம்மை காரி உமிழும் எனவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    நீ யோக்கியனா நான் யோக்கியனா என்பதை ஒதுக்கி வைத்து விட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள் நாங்கள் என்ன செய்தோம் என்பதை இப்பிரச்சனையில் விட்டொழிக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

    மத்தியில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவை தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்தி வருகிறார்கள் என கூறிய அவர், இதை சட்டப்படி தான் எதிர்த்து போராட வேண்டும் என்றும், கர்நாடக முதல்வர் அவரின் தந்தையைப் போல் நியாயத்தைத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இப்போதைய கர்நாடக முதல்வரின் தந்தை, ஜனநாயகத்தை காப்பாற்றியவர், அவரின் மகன், அந்த ஜனநாயகத்தை மதிப்பார் என்று கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.

    கனத்த இதயத்துடன் இந்த தீர்மானம் கொண்டுவருவதாக கூறிய அவர், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் தீர்மானத்தை கொண்டுவருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து, தீர்மானத்தை முன்மொழிந்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cauvery River, Durai murugan, Mekedatu, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி