மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், காலி பணியிடமாக அறிவிக்க நேரிடும்- அரசு எச்சரிக்கை

  • Last Updated :
  • Share this:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நீடித்தது. கொட்டும் மழையிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில், 6வது நாளான இன்று மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேரில் 4 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் மூன்று அரசு மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கோரிக்கையை ஏற்காவிட்டால் ஒட்டுமொத்த மருத்துவர்களும் ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென ஏற்கெனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதோடு பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, பொது சுகாதாரத்துறை, மருத்துவக்கல்வி, ஊரக பணிகள் இயக்குநருக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது "பிரேக் இன் சர்வீஸ்" நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு உள்ளாகுபவர்கள் பணி மூப்பை இழப்பார்கள். இதேபோல், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கான நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்படாது என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Video: மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Watch Also:
First published: