நிலக்கரி இறக்குமதி டெண்டர் தொடர்பான வழக்கு : தமிழக அரசு நாளை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு நாளை காலை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது.

  டெண்டர் நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்கு தடை விதிக்க கோரி தூத்துக்குடியில் தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி மற்றும் சென்னையை சேர்ந்த முன்னாள் மின் உதவி பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி தொடர்ந்துள்ள வழக்கில்,
  2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் வழங்க வேண்டும் என டெண்டர் வெளிப்படை சட்டத்தில் விதி இருப்பதாகவும், ஆனால் 1,330 கோடி மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே தரப்பட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விதிகளை மாற்றியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

  இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காத வகையிலும் அதேசமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வெளியிடப்பட்டதாகவும், மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார் .இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி டெண்டருக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியுமா? உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நாளை காலை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

  மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் தொடர்ந்துள்ள வழக்கில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும்,நிலக்கரி ஊழலை தடுக்க வருமான புலனாய்வு பிரிவு தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கோரியுள்ளனர்..இந்த வழக்கு பொதுநல வழக்கு என்பதால் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: