தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33,377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சான்றிதழ், உணவுபொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: கூகுள்பே, போன்பே மூலம் ரேஷன் பொருள் வாங்க ஏற்பாடு.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
நியாயவிலைக் கடைகளுக்கு அருகில் தேவையான காலியிடம் இருப்பின், அவ்விடங்களில் 10 MT முதல் 50 MT வரை கொள்ளளவு கொண்ட உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 26,272 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அதாவது, ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.