ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெட்ரோல் குண்டு எங்கு, எப்போது வீசப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள்..! - தமிழக அரசை சாடிய ஓபிஎஸ்!

பெட்ரோல் குண்டு எங்கு, எப்போது வீசப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள்..! - தமிழக அரசை சாடிய ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தில் நடைபெறுகிறது என்றால், இதற்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில்  நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

  மேலும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

  "திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழக மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக, 1990ம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு; 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை, 2008ம் ஆண்டு சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது அதனை வேடிக்கை பார்த்தது; 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது;

  2010ம் ஆண்டு அப்போதைய முதல்வர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் திமுக ரவுடி கும்பல் வழக்கறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியது என பல உதாரணங்களை சொல்லலாம்.

  இந்த வகையில், 2021ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

  அதிமுக கலவர வழக்கில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு - சிபிசிஐடி தகவல்! யாரிடம் இருந்தது தெரியுமா?

  இது தவிர, நியாய விலைக் கடைகள், அம்மா உணவகங்கள், தடுப்பூசி மையங்கள் என அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதும், அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை திமுகவினர் மிரட்டுவதும், அரசு அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினர் மிரட்டுவதும், ஒப்பந்ததாரர்களையும், தனியார் நிறுவன அதிகாரிகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டுவதும், கவுன்சிலர்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

  இந்த வரிசையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது.

  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - மத்திய இணை அமைச்சர் வர்மா

  முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவங்கிய இந்த பெட்ரோல் குண்டு வீச்சு, ஈரோடு, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. இதில் அப்பாவி மக்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தில் நடைபெறுகிறது என்றால், இதற்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

  இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. எங்கு, எப்போது பெட்ரோல் குண்டு வீசப்படுமோ என்று மக்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழகம் இன்று அமளிக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

  பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த நிலை தொடர்ந்தால், சட்டம்-ஒழுங்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியும் சீரழியும் நிலைமை உருவாகும்.

  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததுதான் என்ற எண்ணம் தற்போது பொதுமக்களிடையே மேலோங்கி உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

  எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."

  இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: O Panneerselvam