ஸ்டெர்லைட் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ள காரணங்கள் ஆலையை நிரந்தரமாக மூடுமளவுக்கு வலுவானவையாக இல்லை என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது என்கிறார் திருமாவளவன்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை 3 வாரங்களுக்குள் திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது எனவும் கூறியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

  பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தடையாணை பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பு தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் எல்லாவற்றையும் அது நிராகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ஒரு கொள்கை முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ள காரணங்கள் ஆலையை நிரந்தரமாக மூடுமளவுக்கு வலுவானவையாக இல்லை என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

  ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோதே கொள்கை முடிவின் அடிப்படையில் அந்த ஆணை பிறப்பிக்கப்படவில்லை எனவும், நீதிமன்ற ஆய்வில் அது தாக்குப் பிடிக்காது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட எதிர்கட்சிகள் அனைத்தும் சுட்டிக்காட்டின. ஆனால், தமிழக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. இப்போது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு பத்தி 45-ல் அதே காரணம் தான் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

  அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் படுகொலை செய்தது தமிழக அரசின் காவல்துறை. அதன்பின்னர் மக்களின் போராட்டங்களை நிறுத்துவதற்காகவே ஆலையை மூடுவதற்கு ஒரு அரசாணையைத் தமிழக அரசு அவசரம் அவசரமாகப் பிறப்பித்தது. இப்போது ஆலை திறக்கப்படுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த பலவீனமான அரசாணையே காரணமாகியிருக்கிறது என்பது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் தெரியவந்துள்ளது.

  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக உள்ள நீதிபதி ஏ.கே.கோயல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கித் தீர்ப்பளித்தார். அதனால் இந்தியா முழுவதும் பதற்றம் உண்டானது. அதன் பின்னர் மத்திய அரசு திருத்தச் சட்டம் ஒன்றை நிறைவேற்றித்தான் அமைதியை உருவாக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

  இப்போது அவர் பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழக மக்களைப் பதற்றமடைய வைத்திருக்கிறது. அவர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவில் பணியாற்றியவர். அரசியல் சார்பு கொண்டவர்கள் நீதித்துறையின் உயர் பதவிகளுக்கு வரும்போது எத்தகைய கேடு விளையும் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

  தூத்துக்குடி மக்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையிலிலேயே அக்கறை இருக்குமேயானால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமாக இருக்குமானால் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உடனடியாகத் தடையாணை பெற வேண்டும். அது மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: