ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27ஆம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது முடிவிற்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் மட்டுமல்லாமல் ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் எந்த தேதியில் ஆளுநரிடமிருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது என தமிழக அரசு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ஜனவரி 27ல் ஆளுனர் அலுவலகத்திலிருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நளினி தரப்பில் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி நளினியின் மரண தண்டனை தமிழக அரசாலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டது என வாதிட்டார்.
Also read... மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்குவதற்காக குழு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறை அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத் தான் கருத வேண்டுமென வாதிட்டார்.
மேலும் தடா சட்டப்பிரிவுகளின் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன் என ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளாரா என, நளினி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 25ம் தேதி தள்ளிவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.