ஸ்ரீரங்கம் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், உற்சவங்கள் குறித்து விவாதிக்க பிப்ரவரி 22ம் தேதி, 45 மடாதிபதிகள் உள்ளிட்டோருடன் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி, அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்..
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கொரோனா காரணமாக மத தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் தெரிவித்திருப்பதாகவும், கோயில் உற்சவம் நடத்த முடியாது என கூறுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பிரபாகர் நேரில் ஆஜராகியிருந்தார்.
அறநிலைய துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விழாக்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்க 45 மடாதிபதிகள், கோவில் அறங்காவலர்கள், தீர்த்தகாரர்கள், ஸ்தலத்தாரர்கள் கூட்டத்தை பிப்ரவரி 22ம் தேதி கூட்டியுள்ளதாக தெரிவித்தார்.
Also read... சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் - எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோவில் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள நிலையில், சென்னையில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாகவும், அதில் கலந்து கொள்வதில் சிரமம் உள்ளதால் ஸ்ரீரங்கத்திலேயே இந்த கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்த கூட்டத்தை காணொலி மூலமும், நேரிலும் நடத்த வேண்டும் என அறநிலைய துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், நேரிலும், ஆன் லைன் மூலமும் கலந்து கொள்ளலாம் எனவும், ஆன் லைன் லிங்-கை அறநிலைய துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.