பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உதவித்தொகை மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கக்கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தது.
கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என்றும், குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாமென கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை எனவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
21 வகையான மாற்றுத் திறனாளிகளில் 5 வகையினர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாகவும், மற்ற அனைத்து வகையினருக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
உதவித் தொகை மட்டுமல்லாமல் போக்குவரத்தில் சலுகை, மருத்துவ உதவி, ரேசன் சலுகை உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சமூக நலத்துறை முதன்மை செயலாளர் இன்று ஆஜராகாத நிலையில், அவர் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியான வாழ்க்கை குறித்து நீதிமன்றம் கேட்கவில்லை என்றும், ஆனால் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்தே நீதிமன்றம் அறிய விரும்புவதாக தெரிவித்தனர்.
Also read... சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
பின்னர் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்த நீதிபதிகள், அவர் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madras High court