நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு ஆதரவா? என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும் நாளை மறுநாளும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதில் போக்குவரத்து, மின்துறை, வங்கி, காப்பீடு துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசை பொறுத்தவரையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்திருப்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
தங்கள் உரிமைகளுக்காக போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது எந்த வகையில் நியாயம். இதன் மூலம் மத்திய அரசுக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நேரடியாக ஆதரவும் தமிழக அரசு அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றம்... தடுக்க முடியாமல் கதறி அழுத பெண்கள்
ஊழியர்களின் போராட்டம் குறித்த விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை எடுப்பதோடு போராட்டத்திற்கு அனுமதி அளிக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் 28, 29 ஆகிய தேதிகளில் உரிமைக்காக போராட்டம் நடத்த உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கக் கூடாது.
தமிழக அரசின் செயல் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.