கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

நாட்டிலேயே, கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்துள்ளது.

 • Share this:
  கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

  இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.

  அதனைத்தொடர்ந்து, தலைமை செயலத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

  அந்த வகையில், தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதாக, கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

  அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க ஆணையிட்டுள்ளார். இதன்படி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பானது 25 ஆயிரத்தை எட்டியுள்ளது. நாட்டையே உலுக்கி வரும் இரண்டாம் அலை பரவலால், அரசு மருத்துமனைகளில் இடம் கிடைப்பதும், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைப்பதும் கடும் சிரமமாகி உள்ளது. இதனால், பெரும்பாலோனோர் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.

  இந்த சூழ்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே, கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை கட்டணத்தை காப்பீட்டுத் திட்டத்தில் கீழ் அரசே ஏற்கும் என்று அறிவிக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்துள்ளது.
  Published by:Esakki Raja
  First published: