• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்! வழக்கின் முழு விவரம்

பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்! வழக்கின் முழு விவரம்

பேரறிவாளன்

பேரறிவாளன்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பேரறிவாளனை விடுதலை செய்ய இதுவரை எடுக்கப்பட்ட நடவக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையில், சிபிஐ சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள சதித்திட்டம் குறித்து விரிவாக விசாரிப்பதற்காக ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த படுகொலையில், வெளிநாட்டுச் சதி இருப்பதை மறுக்க முடியாது என்று கூறிய ஜெயின் கமிஷன், இது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனது இறுதி அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்தது.

    ஜெயின் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில், ராஜிவ் படுகொலையில் இன்றளவும் மர்மமாக உள்ள விஷயங்கள் குறித்து விசாரிப்பதற்காக 1999-ம் ஆண்டு, சிபிஐ தலைமையில் எம்டிஎம்ஏ என்ற விசாரணை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தப் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடி குண்டை யார் உருவாக்கியது? அது எங்கிருந்து வந்தது? என்பது உட்பட, மிக முக்கியமான விஷயங்கள் குறித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக எம்டிஎம்ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், எம்எடிஎம்ஏவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பெல்ட் வெடிகுண்டு எங்கிருந்து வந்தது என்பதே இதுவரை கண்டுபிடிக்கப்படாததை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, எம்டிஎம்ஏ விசாரணை முடியும் வரை தனக்கு வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கும்படி மனுவில் பேரறிவாளன் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

    ஆகவே, முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் மற்றொரு விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.  அதை படித்துப் பார்த்த நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையில் புதிததாக ஒன்றும் இல்லை என்றும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரிடம், உங்களுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அது தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டதை பேரறிவாளன் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய பேரறிவாளனின் வழக்கறிஞர், அந்த பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.  அப்போது குறுக்கிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: