Home /News /tamil-nadu /

10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கைவிடுக, மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர் - மு.க.ஸ்டாலின்

10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கைவிடுக, மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று திமுக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை கைவிடவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் இருநூற்று ஐம்பதுக்கு மேல் சென்றுவிட்டது. கோவிட்-19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட 'க்ளேட் A3i' ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது.

    நோய்த் தொற்றைத் தடுப்பதிலும் - போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ - மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும்.

    கடந்த சில நாட்களாக குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள் எனப் பல தரப்பினருக்கும் கொரோனா நோய்த் தொற்று பரவிவருவதை அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது. அப்படிப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்பது, மாணவ - மாணவியருக்கு மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    ஹால் டிக்கெட் வாங்குவதற்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பிலிருந்து பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் என அரசு சொல்கின்ற அனைத்துமே நோய்த் தொற்றுப் பரவலுக்கு வலிந்து இடமளிக்கின்ற செயல்பாடுகளேயாகும். கிராமப்புற ஏழை மாணவர்கள் - அரசுப் பள்ளியில் பயில்வோர் எனப் பலரும் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தி பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது பாகுபாட்டை வளர்க்கின்ற, பச்சை ஏமாற்றுத்தனமாகும்.

    ‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை! நமக்கோ உயிரின் வாதை!’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதை வரிகள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான். மக்கள் நலன் பற்றியும் சிந்திக்காமல், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் ‘நோய் வளர்ப்புத் திட்டத்தைச்' செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையான, பாதுகாப்பான நிலை உருவான பிறகு தேர்வை நடத்திக் கொள்ளலாம்“ என்று தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vijay R
    First published:

    Tags: MK Stalin, Public exams

    அடுத்த செய்தி