கூடங்குளம் அணுவுலைகளுக்கு CRZ அனுமதியை நீட்டித்து வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 4 அணு உலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளுக்கான கட்டுமான பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்த 4 அணு உலைகளுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி வழங்கப்பட்டு, ஏற்கனவே ஒருமுறை அது நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதியை மேலும் நீட்டித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சில நிபந்தனைகளுடன் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, கூடங்குளம் அணு உலை நிர்வாகம் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்து தருவதாகக் கூறிய அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றும் இதற்காக தனியாக சமூக பொறுப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறிய தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், அணு உலையின் செயல்பாடு குறித்த அச்சத்தைப் போக்குவதற்கு பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் பணிகளையும் கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Koodankulam, Nellai, Nuclear Power plant