தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் 30 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வனம், சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சரும் ராமச்சந்திரனும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கிராமந்தோறும் 100 ஹெக்டேர் பரப்பளவில் மரகத பூஞ்சோலைகள் 25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் 6 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.
இதுபோல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக 21 புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிறு விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி, மாநில விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அதிகரிப்பு என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
Must Read : விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் திறனை மேம்படுத்தி மின்னணு ஆளுமை முறைகள் செயல்படுத்தப்படும் என்றும் மெய்யநாதன் கூறினார். மேலும், தேசிய சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வளாகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 3 இளங்கலை பாடங்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.