தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர்
ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு தளர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 01 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பள்ளி, கல்லூரிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் 15-ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் திறப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் நாளை முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.