Home /News /tamil-nadu /

கோணங்கிக்கு இலக்கிய மாமணி விருது... தமிழ் எழுத்துலகம் வாழ்த்து!

கோணங்கிக்கு இலக்கிய மாமணி விருது... தமிழ் எழுத்துலகம் வாழ்த்து!

எழுத்தாளர் கோணங்கி.

எழுத்தாளர் கோணங்கி.

கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்தார்.

  எழுத்தாளர் கோணங்கிக்கு தமிழக அரசு நேற்று இந்த ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவருக்கு சக எழுத்தாளர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

  நவீன் தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவருமான கோணங்கிக்கு தமிழக அரசு 2022-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

  தமிழ்நாடு திருநாள் நேற்று கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து அவ்விழாவில் கோணங்கிக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் விருது வழங்கினர். முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வழியாக விழாவில் பங்கேற்றார்.

  விருது தொகையான 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும், தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை போர்த்தப்பட்டது. அவரோடு கு. சின்னப்ப பாரதி, இரா. கலியபெருமாள் ஆகியோர்க்கும் விருது வழங்கப்பட்டது.

  கோணங்கி குறிப்பு:

  கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் சு.சண்முகம் மற்றும் சரஸ்வதி. கோணங்கி தற்போது கோவில்பட்டியில் வசித்துவருகிறார்.

  சிறிது காலம் பில்கலெக்டராக கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்த இவர் கடன்பாக்கிக் காரணமாக ஒரு ஏழை விவசாயியின் மாடுகளை ஜப்தி செய்ததைக் கண்டு மனம் வருந்தி தன் வேலையை விட்டதாகக் கூறப்படுகிறது. கோணங்கி திருமணம் செய்துகொள்ளவில்லை.

  எழுத்தாளர் கோணங்கி. படம்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்.


  கோணங்கியின் இலக்கிய வழிகாட்டியாகக் கவிஞர் தேவதச்சன் அறியப்படுகிறார். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கோணங்கியின் நெருங்கிய இளமைக்கால நண்பர். கோணங்கியின் மதினிமார்கள் கதை பெரிதும் பேசப்படும் ஒரு சிறுகதையாக உள்ளது.

  இவரது பாழி, பிதிரா, த மற்றும் நீர்வளரி உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் உள்ளிட்ட 9 சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

  கோணங்கியின் கல்குதிரை இதழ் தமிழ் நவீன இலக்கியத்தின் சிறுபத்திரிகை மரபை இன்றும் நிலைநாட்டும் இதழாகப் பார்க்கப்படுகிறது. அந்த இதழில் தமிழின் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும் புதிதாக எழுத வரும் இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளையும் இந்த இதழ் வெளியிட்டுவருகிறது.

  கோணங்கியின் சகோதரர் தமிழ்ச்செல்வனும் ஒரு எழுத்தாளர். இவரது மற்றொரு சகோதரர் முருகபூபதி. இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் நாடகக்கலைஞர். இவர் தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர்களில் ஒருவர்.

  எழுத்தாளர் கோணங்கி. படம்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்.


  கோணங்கி இலக்கிய மாமணி விருது பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன், “அவர் எனக்கு மேலானவர்.கைபிடித்து அழைத்துச் சென்றவர். அவருடனான நினைவுகள் எனக்கு அதிகம். எழுத்தாளன் என்பதைத் தாண்டி அவர் ஒரு தூய ஆன்மா.அழிவில்லாதவர்.” எனத் தெரிவித்துள்ளார்.

  மேலும் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், வெ.மு. பொதியவெற்பன், முருகேச பாண்டியன், குமார் அம்பாயிரம், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  கோணங்கியின் வாசகரான நடிகர் கமலஹாசன் நவீனப் புனைவெழுத்துலகில் முன்வரிசைக்காரர் எழுத்தாளர் கோணங்கி. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய கதைத் தொகுப்புகளால் ஓர் அளவுகோலை அமைத்தவர். அவர் தமிழக அரசின் இலக்கியமா மணி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: News, Tamilnadu

  அடுத்த செய்தி