ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொதுத்தேர்வைக் கண்டு பயமா...? 104 உதவி எண்ணை அழையுங்கள்

பொதுத்தேர்வைக் கண்டு பயமா...? 104 உதவி எண்ணை அழையுங்கள்

104 உதவி மையம்

104 உதவி மையம்

  • News18
  • 3 minute read
  • Last Updated :

பொதுத் தேர்வை கண்டு பயம் உள்ள மாணவர்கள் தமிழக அரசின் 104 உதவி மைய எண்ணை பயன்படுத்தி தெளிவடையுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மாணவர்கள் பதட்டத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் உடல்நிலையும் மனநிலையும் எவ்வாறு இருக்க வேண்டும் என 104 உதவி மையம் ஆலோசனை வழங்கி வருகிறது.

தேர்வு தயாரிப்பு காலம், தேர்வுக்கு முந்தைய நாள், தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் என மூன்று கட்டங்களாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 104 எண்ணுக்கு அழைக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பதில் கூற மன நல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

தமிழக அரசின் 104 உதவி மையத்தில் பணி புரியும் மன நல ஆலோசகர் ஹேமலதா பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறார்.

"பெரும்பாலான மாணவர்கள் நாங்கள் படித்தது மறந்து விட்டது , என்ன செய்வது என கேட்டு அழைக்கின்றனர். எதையும் பதட்டபடாமல் படியுங்கள், புரிந்து படியுங்கள் என கூறுவோம்.  கடைசி நேரத்தில் எதையும் புதிதாக படிக்க வேண்டாம். தேர்வு நேரத்தில் நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும்.

பொதுத் தேர்வை பள்ளித்தேர்வாக நினைத்து எழுதுங்கள். அதே பாடம், அதே கேள்விகள் தான். பிறகு எதற்கு பயம்? பள்ளித் தேர்விலாவது எந்த விடைத்தாள் யாருடையது என்று திருத்தும் ஆசிரியருக்கு தெரியும். பொதுத் தேர்வில் தெரியாது. நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ அதற்கான மதிப்பெண் கிடைக்கும். எனவே பயப்படாமல் எழுத வேண்டும் என்பதே முக்கியம்" என்கிறார் ஹேமலதா.

"104-க்கு அழைக்கும் மாணவர்களுக்கு நான் எதுவும் புதிதாக கூற போவதில்லை. ஆனால் சொல்லும் விசயத்தை நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளில் ஆறுதல் தரும் தொனியில் பேச வேண்டும். 'ஒன்னும் இல்ல. நீ படிச்சது தான் வரும். பயப்படாம் எழுது' என்று கூறும் போது அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது.

நிறைய மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு வந்து நன்றி தெரிவித்துள்ளனர். நேரடி தொலைபேசி வசதி இல்லாத கிராமங்களில் பள்ளியில் எல்லா மாணவர்களையும் வரவழைத்து நான் பேசுவதை மைக் மூலம் ஒலிபரப்புவார்கள். மாணவர்கள் சந்தேகம் இருந்தால் நேரடியாக கேட்பார்கள்" என்று மேலும் கூறுகிறார்.

104 உதவி மையத்தின் தலைவர் மருற்றுவர் சிவகுருநாதன், " தேர்வு தயாரிப்பை சரியாக திட்டமிட வேண்டும். கடினமான பாடங்களை முழுவதும் ஒரே நேரத்தில் படிக்கக் கூடாது. அது மிகுந்த சோர்வை தரும். எனவே இடை இடையே எளிமையான பாடங்களையும் படிக்க வேண்டும். அப்போது ஒரு நாளின் முடிவில் நிறைவாக இருக்கும் . அடுத்த நாள் படிக்க உற்சாகமாக இருக்கும்" என்கிறார்.

104 உதவி மையத்துக்கு மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் அழைக்கின்றனர். பிள்ளைகள் போதிய நேரம் படிப்பதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் புகாராக உள்ளது.  அவர்களுக்கும் 104 உதவி மையம் ஆலோசனை வழங்குகிறது. " மாணவர்களுக்கு எது வசதியான நேரமோ அந்த நேரத்தில் படிக்கட்டும். அதிகாலையில் தான் படிகக் வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம்.

20-30 நிமிடங்கள் ஒரு பாடத்தை கவனித்து படித்து முடித்த பிறகு மூளை சோர்வாகிவிடும். எனவே மாணவர்களுக்கு டீ காபி பால் வழங்கலாம். பொதுவாக எண்ணெய் பொறித்த உணவுகளை விட வேக வைத்த உணவை வழங்க வேண்டும்." என்கிறார் மருத்துவர் சிவகுருநாதன்.

கடந்த ஆண்டு தேர்வு தயாரிப்பு காலத்தில் 6765 அழைப்புகளும் தேர்வுக்கு முன் தேர்வு 5946 அழைப்புகளும் தேர்வு முடிவுகளின் போது 7934 அழைப்புகளும் வந்துள்ளன.

எதிர்ப்பார்க்காத தேர்வு முடிவுகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. " இந்த தேர்வு முடிவுகள் வாழ்க்கையை புரட்டி போடக்கூடியது அல்ல. பல வாய்ப்புகள் உள்ளன.

100-க்கு 97 மதிப்பெண் எடுத்ததற்காக அழுதவர்களும் உண்டு, 50 மதிப்பெண் எடுத்து நிறைவடைந்தவர்களும் உண்டு. எனவே அவரவர மன நிலை பொறுத்து ஆலோசனை வழங்குவோம்" என்கிறார் கடந்த பல ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றி வரும் மன நல ஆலோசகர் ஹேமலதா.

தமிழக அரசின் 104 உதவி மையம் ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளின் போது இந்த சேவையை வழங்கி வருகிறது. எனவே தேர்வு குறித்த சந்தேகம், எப்படி கையாள வேண்டும் என்ற பதட்டம் இருந்தால் 104 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Public exams