முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Thoothukudi Sterlite : ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி - தமிழக அரசு

Thoothukudi Sterlite : ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி - தமிழக அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெல்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து, தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் இயக்கி கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெல்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து, தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் இயக்கி கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவிட்-19 நோய் தொற்று அதிகமாகி அதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களை காப்பாற்ற பிராண வாயு (ஆக்சிஜன்) வின் தேவை அதிகரித்து வருவதை அரசு கருத்தில் கொண்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, தங்களது நிறுவனத்தில் உள்ள இரண்டு ஆக்சிஜன் தயாரிக்கும் கலன்களை மட்டும் பயன்படுத்தி இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் நாளொன்றுக்கு திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள ஆக்சிஜன் 1,050 டன் பிராண வாயு உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும், மாநிலத்தின் பிற மருத்துவமனைகளுக்கும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த இக்கட்டான பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆலையை மட்டும் இயக்குவது தொடர்பான பல்வேறு வழிமுறைகளை ஆராய இன்று (26.4.2021) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருமதி கனிமொழி, எம்.பி., மற்றும் திரு.ஆர்.எஸ். பாரதி, எம்.பி., பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திரு.எல். முருகன் மற்றும் திரு.கே.டி. ராகவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு.கே. தங்கபாலு மற்றும் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு.கே. பாலகிருஷ்ணன் மற்றும் திரு.ஏ. சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு.ஆர். முத்தரசன் மற்றும் திரு.எம். வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. ஏ. கணேஷ் குமார், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திரு. எஸ். அன்புராஜ் மற்றும் திரு.வி.டி. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆலையை மட்டும் இயக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1) மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம்.

ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

2) உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3) ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.

4) இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள், சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.

5) தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

Must Read : இலங்கையிலும் பரவும் புதுவகை கொரோனா வைரஸ்: காற்றில் 1 மணி நேரம் வரை இருக்கும் என தகவல்

top videos

    மேலும், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு.து.மு. திரிபாதி, இ.கா.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு. என். முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் திரு.ஏ.வி. வெங்கடாசலம், இ.வ.ப., (ஓய்வு), மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Oxygen, Sterlite plant, Thoothukudi Sterlite