பிடிஆர் Vsவானதி: நீங்கள் பேசியதை போல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் பேசத் தொடங்கினால்.. வானதி பதிலடி

பிடிஆர் - வானதி சீனிவாசன்

பெரிய மாநிலம், சிறிய மாநிலம் என்று நாம் பிரித்துப் பார்க்கிறோமா? வருவாய் கொடுக்கும் மாவட்டம், கொடுக்காத மாவட்டம் எனத் தமிழகத்தில்தான் பிரித்து பார்க்கிறோமா?

 • Share this:
  நீங்கள் பேசியதை போல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் பேசத் தொடங்கினால் அதை எப்படிக் கையாள்வீர்கள் என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  முன்னதாக, கடந்த மே 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்கு அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

  மேலும் இதன் அடிப்படையிலேயே கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு, மிகச்சிறிய மாநிலமான கோவா சார்பில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது எதிர்ப்பை தெரிவித்தார். பெரிய அண்ணன் மனப்பான்மையில் பேசக்கூடாது என்ற வகையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார் கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ. இந்த விவகாரம் இருவருக்குமிடையேயான பிரச்னைக்கு வித்திட்டது.

  இதனிடையே பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், பழனிவேல் தியாகராஜனின் செயல் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் இருந்தது என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த பழனிவேல் தியாகராஜன், உங்கள் பொய்களில் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள். ஒரு மாறுதலுக்காக உண்மையாக வேலை செய்ய முயற்சி செய்யங்கள் என்று கூறி வானதியைக் கடுமையாக விமர்சித்தார். இப்படி இருவருக்கும் இடையில் வார்த்தை போர் தொடர்ந்தது.

  இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எந்த மாநிலமாக இருந்தாலும், எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையைத்தானே கொடுக்கிறோம்? பெரிய மாநிலம், சிறிய மாநிலம் என்று நாம் பிரித்துப் பார்க்கிறோமா? வருவாய் கொடுக்கும் மாவட்டம், கொடுக்காத மாவட்டம் எனத் தமிழகத்தில்தான் பிரித்து பார்க்கிறோமா?

  பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். நீங்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலில் பேசியதைப்போல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் பேசத் தொடங்கினால் அதை எப்படிக் கையாள்வீர்கள்? ஒரு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருக்கும். இன்னொரு மாவட்டத்தில் விவசாயம் நன்றாக இருக்கும். விவசாயத்தில் அரசாங்கத்துக்குப் பெரிய வருமானம் இருக்காது. ஆனால், நமக்கு இரண்டுமே வேண்டும்.

  அதனால், கோவாவை சிறிய மாநிலம் என்று கூறியதைத்தான் நான் தவறு என்றேன். பழனிவேல் தியாகராஜன் அதற்கு எப்படி பதிலளிக்கிறார் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது அவரது தரத்தைக் காட்டுகிறது. பொதுவெளியில் இது எனக்குப் புதிததல்ல.

  ஆரோக்கியமான விமர்சனத்தை பொதுவெளியில் இருக்கும் எல்லோரும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். தவறு இருந்தால் அதைத் திருத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: