TN Election Result 2021: தென் மாவட்டங்களில் முந்தும் தி.மு.க - மதுரையில் டஃப் கொடுத்த அ.தி.மு.க

TN Election Result 2021: தென் மாவட்டங்களில் முந்தும் தி.மு.க - மதுரையில் டஃப் கொடுத்த அ.தி.மு.க

மு.க.ஸ்டாலின்

மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட தென் மாவட்டங்களில் தி.மு.க அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

  • Share this:
    தமிழகம் உள்பட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க, தி.மு.க இடையே நெருக்கமான போட்டி இருந்துவருகிறது. தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. இருப்பினும், 200 தொகுதிகள் வரை தி.மு.க வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க பல தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களுக்கு பெரும் சவாலைக் கொடுத்துவருகிறது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க படுதோல்வியடையும் என்று பலரும் கணித்தனர். இருப்பினும், தென் மாவட்டங்களிலும் குறிப்பிடத் தகுந்த அளவில் அ.தி.மு.க வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும், தென் மாவட்டங்களில் தி.மு.கவினை கையே ஓங்கியிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் தி.மு.க 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தூத்துக்குடியிலும் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. கோவில்பட்டி தொகுதியில் மட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். அவருக்கு நெருக்கமாக இரண்டாவது இடத்தில் டி.டி.வி.தினகரன் உள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் மொத்த 10 தொகுதிகளில் தி.மு.க 5 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மதுரையில் தி.மு.கவுக்கு நிகராக அ.தி.மு.க இருந்துவருகிறது. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரை மாவட்டத்தில்தான் போட்டியிட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.கவே முன்னிலையில் உள்ளது. திருநெல்வேலியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    தென்காசியிலும் மொத்த 5 தொகுதிகளில் 3 தொகுதியில் தி.மு.கவும் 2 தொகுதியில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளது. ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை விட சுமார் 1,500 வாக்குகள் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் இருந்துவருகிறார். கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
    Published by:Karthick S
    First published: