TN Election Result 2021 : போடியில் ஓ.பி.எஸ் முன்னிலை... தங்கத் தமிழ்ச்செல்வன் பின்னடைவு!

TN Election Result 2021 : போடியில் ஓ.பி.எஸ் முன்னிலை... தங்கத் தமிழ்ச்செல்வன் பின்னடைவு!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி ஸ்டார் தொகுதியாகவும் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான தொகுதியாகவும் மாறியிருக்கிறது.

  • Share this:
தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக விளங்கும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி ஸ்டார் தொகுதியாகவும் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான தொகுதியாகவும் மாறியிருக்கிறது. அங்கு அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் களம் கண்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ் செல்வன் களம் கண்டுள்ளார். அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி.தினகரனின் ஆதரவாளராக மாறினார். பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலினால் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு செயலர் பதவியும், மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ்குமாரும், நாம் தமிழர் சார்பில் மு.பிரேம் சந்தர் என்பவரும், அமமுக சார்பில் எம்.முத்துச்சாமியும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தற்போது முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் 2,520 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2,157 வாக்குகளுடன் பின்னடைவு அடைந்துள்ளார்.

 

 
Published by:Arun
First published: