சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்டது நாய்க்கறி என்ற வதந்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற பொய்களை பரப்பி அரசியல் செய்ய சதி நடப்பதாக இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் அப்துல் சமது கூறும்போது, கடந்த 17-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ஆட்டிறைச்சி ராஜஸ்தான் மாநில ஜோத்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால், நாய் இறைச்சி என்று ஊடகங்களில் தவறான பிரேக்கிங் செய்தி போடப்பட்டது. இதனால் இறைச்சி உண்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது திட்டமிட்ட வெறுப்பு அரசியல் என்றும், தவறான தகவல் பரவியதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது என்றும் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது கால்நடை மருத்துவ கல்லூரி ஆய்வின் முடிவில் பிடிபட்ட இறைச்சி ஆட்டிறைச்சிதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இத்தகைய பிரச்சினை உருவாவதற்கு முக்கிய காரணம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு போதிய தெளிவு இல்லாதது தான்.
மேலும் வேற்று மாநில ஆடுகள் எப்படி இருக்கும் என்று அவர்கள் அறிந்து இருத்தல் வேண்டும். தவறான செய்தி வெளியான பிறகு, உடனடியாக அதனை அரசு தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி
வெளி மாநில ஆடுகள் இறைச்சியாக கொண்டுவரப்படுவது வெறும் 0.5 சதவீதம் தான். 99.5 சதவீதம் ஆடுகள் உயிருடன் தான் கொண்டுவரப் படுகின்றன. விவசாயம் செழிப்பாக உள்ள மாநிலங்களில் இருந்து ஆடுகள் வாங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆடு வளர்ப்பு குறைவு. ஆனால் இறைச்சி தேவை அதிகம்.
கெட்டுப் போன இறைச்சி மற்றும் தவறான தகவல் கொடுத்து இறைச்சி கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் இருப்பது போன்று வெளி மாநில இறைச்சியை கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு அனுமதி வழங்கினால் எல்லைப் பகுதியில் லஞ்சம் கொடுப்பது தவிர்க்கப்படும். அதனால் இறைச்சி விலையும் குறையும்.
மேலும் இறைச்சி கூடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். சுகாதாரம் பேணுவதற்கு அரசு நடவடிக்கைகள் தேவை. அசைவப் பிரியர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. அதனால் அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த சதி நிகழ்ந்தது. ஆட்டு இறைச்சி என்று உறுதியான பிறகு பிரேக்கிங் செய்தியாக வழங்கிய ஊடகங்களுக்கு நன்றி. இதனால் கடந்த 5 நாட்களாக மங்கிப் போன இறைச்சி வியாபாரம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது.
மேலும் இறைச்சி தொழிலில் ஈடுபட்டு உள்ள சிறுபான்மையினர் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இது என்பதால், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்தியில் அசைவ உணவை ஒழிக்க வேண்டும் எனவும், அசைவ உணவுகளை உண்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என சித்தரிக்கும் சைவ உணவு உண்பவர்கள் செய்த சதி திட்டம்தான் இது எனவும் தெரிவித்தார்.
பசுவின் பெயரால் சிறுபான்மையினர் சமூகத்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருபவர்கள், ஆட்டு இறைச்சியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய சதி செய்கிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டினர்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.