தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றிற்கு 800 மெட்ரிக் டன்'னாக உயரக்கூடும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னை உயர்நீதிமன்றம்

ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டி ஆர் டி ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும், மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் அதனை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றிற்கு 800 மெட்ரிக் டன்'னாக உயரக்கூடும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததையடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 டன் ஆக்சிஜனை ஒதுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னிலிருந்து 60 டன் ஆந்திரா தெலுங்கானாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

Also read... தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளர் உயிரிழப்பு...!

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகில் கஞ்சிக்கோடு உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தென் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கிய நிலையில் அது தற்போது நிறுத்திப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகம் மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் எனவும் அச்சம் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான தடுப்பு மருந்து, ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேசிய நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் 12,000 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டு அதில் 5592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாலக்காட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே அது நிறுத்தப்பட்டதாகவும் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்
தற்போது 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழகத்துக்கு தற்போது 475 டன் ஆக்சிஜன் தேவை உள்ள நிலையில் 419 டன் மட்டுமே மத்திய அரசு ஒதுக்குவதாகவும் எதிர்வரும் நாட்களில் 800 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலை 15ம் தேதி முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

மத்திய அரசு தரப்பில், செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து உற்பத்தி மையம் துவங்குவதற்கான டெண்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் போதுமான அளவு ரெம்டிசிவர் மற்றும் தடுப்பு மருந்து இருப்பு உள்ளதாக புதுவை அரசு தெரிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் அளிக்கும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு போதுமான ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டிசிவர் மருந்து சப்ளைக்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கோவை போன்ற பகுதிகள் கேரளா எல்லைக்கு அருகிலேயே உள்ளதால், பாலகாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மீண்டும் அந்த பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டி ஆர் டி ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும், மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் அதனை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மே 12க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: