தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒருநாள் பாதிப்பு நேற்று 200ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மக்களிடையே எடுத்துரைத்து, இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி சிரமம் இருக்காது
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, முகக் கவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துதல், தடுப்பூசி செலுத்திகொள்வதை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.