சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது: நீதி வழங்கவில்லை - பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கே.எஸ்.அழகிரி அதிருப்தி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது: நீதி வழங்கவில்லை - பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கே.எஸ்.அழகிரி அதிருப்தி
கே எஸ் அழகிரி
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 4:15 PM IST
  • Share this:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், ‘அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திடத்துக்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை 1992-ல் பலவந்தமாக இடித்து தடைமட்டமாக்கினர்.

கரசேவகர்களைத் தூண்டும் வகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம், மத்திய புலனாய்வுத்துறை மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்ட பா.ஜ.கவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017-ல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டபோது, ‘இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையாக எடுக்கவேண்டும்’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading