சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (1-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (1-2-2022) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது-
கோயம்புத்தூர் நகருக்கு தண்ணீர் வழங்கவேண்டிய முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான மொத்த நீர்த் தேவையான 265 மில்லியன் லிட்டரில், 101.4 மில்லியன் லிட்டர், சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது. சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் கடந்த ஆறு ஆண்டுகளில், கேரள அரசு 0.484 டி.எம்.சி.-யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பெய்துள்ளபோதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, முழு நீர்த்தேக்க மட்டத்திற்கு பதிலாக, இருப்பு நிலையைக் குறைத்துப் பராமரிக்கிறது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அணையின் நீர் மட்டம் குறைவதால், இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் தண்ணீரை வழங்க முடிகிறது.சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : திமுகவின் 9 மாத கால ஆட்சியில் மக்கள் நொந்து போய் உள்ளனர் - கடம்பூர் ராஜூ
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரை அணுகியுள்ளது. பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்க மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முழு கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும். கேரள நீர்ப்பாசனத் துறை, 03.01.2022 முதல் நீர்வரத்து வரும் வால்வ்-4-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழ்நிலையில், கேரள அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த வால்வ்-4-ன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கேரள நீர்ப்பாசனத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழக அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு
இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், மேலும், 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin