Home /News /tamil-nadu /

போதுமான உணவு.. மருத்துவ வசதி எல்லாம் இருக்கா - முதல்வர் ஸ்டாலின் நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் விசாரிப்பு

போதுமான உணவு.. மருத்துவ வசதி எல்லாம் இருக்கா - முதல்வர் ஸ்டாலின் நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் விசாரிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin : நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கரையோர பகுதிகளில் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்டறிந்தார்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,80,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கந்தன் பட்டறை , பசுவேஷர் நகர் , கொடுமுடி இலுப்புத்தோப்பு உள்ளிட்ட காவிரி கரையோரமுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட மக்களை வருவாய்த்துறையினர் தனியார் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    Also Read:  அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.. போதைப் பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்..

    இதேபோன்று, நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன் பேட்டை, சோழசிராமணி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 560 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 200 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. கோவிந்தபுத்தூர், அறங்கேட்டை, அனைக்குடி உள்ளிட்ட பகுதிகளில், வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், கொள்ளிட கரையோர கிராமங்களில் 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.



    இதனிடையே, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வுசெய்தார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி திருமண மண்டபம் நிவாரண முகாம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மகாராஜா மண்டபம், பிச்சாண்டார் கோயில் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cauvery River, Flood, MK Stalin

    அடுத்த செய்தி