நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை, கவர்னர் ஆர்.என்.ரவி மறு பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினமான சனிக்கிழமையன்று நீட்தேர்வு விலக்கு குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார்.
இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்புவதற்கான கோப்பு, ஆளுநரால் 1-2-2022 அன்று கையெழுத்திடப்பட்டு, 2-2-2022 அன்று மாலை தமிழ்நாடு அரசால் பெறப்பட்டது. உடனடியாக ஆளுநரின் கடிதம், சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு இன்று அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வானது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதிலும், இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது.
இதனடிப்படையில்தான், இந்த நீட் தேர்வு முறை நமது மாணவர்களை பாதித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைக் களையக் கூடிய வகையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல.
எனவே, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும்.
இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.