'ரூ 2,500 பொங்கல் பரிசு அறிவிப்பை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

2,500 ரூபாய் பொங்கல் பரிசு அறிவிப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுக அரசு மீது, திமுக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தங்களது அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திமுக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக சாடினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.

  மேலும், முந்தைய ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக முதலமைச்சர் கூறினார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர், தற்போதைய அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.

  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசிவிடக் கூடாது என்பதற்காக, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: