குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1500 ; ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஒரு வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 • Share this:
  திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1500 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவதாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ. 1500 வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

  மற்ற விரிவான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அதிமுக தேர்தல் அறிக்கை ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. அதிலிருந்து எப்படியோ தகவல் கசிந்துவிடுகிறது. எனவே திமுகவைப் பார்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என்று கூறுவது தவறானது என்றார்.

  மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையிலிருந்து வெளியாகும் தகவலை வைத்து நேற்றைய பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனநிறைவு பெறுகின்ற அளவுக்கு எங்களது தேர்தல் அறிக்கை அமையும் என்றும் கூறினார்.
  Published by:Sheik Hanifah
  First published: